ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர் மற்றொரு தாக்குதல் நடத்தப்போவதாக அமெரிக்கா தேசிய பாதுகாப்பு மையம் எச்சரிக்கை அளித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் முழு அதிகாரமும் தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் ஆப்கானை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக தப்பிச் செல்கின்றனர். அதிலும் அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டு மக்களை அங்கிருந்து வெளியேறுவதில் தீவிர முனைப்பு காட்டி வருகின்றனர். இந்த நிலையில் காபூலில் உள்ள ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர்.
அதிலும் விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் ஹரசன் பிரிவினர் நடத்திய இந்த தாக்குதலில் 13 அமெரிக்கா வீரர்கள் உட்பட மொத்தம் 175 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து விமான நிலையத்தை குறிவைத்து மற்றொரு பயங்கரவாத தாக்குதல் நடைபெற வாய்ப்புள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. இந்த தாக்குதல் குறித்து அதிபர் ஜோ பைடனிடம் அமெரிக்கா தேசிய பாதுகாப்பு மையம் தகவல் அளித்துள்ளது. இதனால் காபூல் விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.