குட்டையை ஆக்கிரமித்து கட்டியிருந்த வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள சின்னப்பொண்ணு நகரில் குட்டை ஒன்று உள்ளது. இந்த குட்டையை அதே பகுதியில் வசிக்கும் சுமார் 11 குடும்பத்தினர் ஆக்கிரமித்து வீடு கட்டி பல வருடங்களாக வசித்து வந்துள்ளனர். இதனை அறிந்த மாநகராட்சி ஆணையாளர் விஸ்வநாதன், ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி மாநகராட்சி பணியாளர்கள் நீர்நிலையை ஆக்கிரமித்து வீடு கட்டியிருந்த 11 குடும்பத்தினருக்கும் ஆக்கிரமிப்புகளை தாங்களே முன்வந்து அகற்றிக் கொள்ள வேண்டும் என நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதனால் அந்த 11 வீடுகளிலும் வசித்து வந்த பொதுமக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாங்களே முன்வந்து வீடுகளில் இருந்த பொருட்களை எடுத்துக் கொண்டு வீடுகளை காலி செய்தனர். இதனையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் 2 பொக்லைன் எந்திரத்துடன் அப்பகுதிக்கு சென்று குட்டையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 11 வீடுகளையும் இடித்து அகற்றினர். மேலும் அப்பகுதியில் அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.