இந்த மாதிரியான உணவுகளை சாப்பிடாதீர்கள், உங்கள் தூக்கம் கலைந்து விடும். ஆழ்ந்த உறக்கம் வேண்டுமென்றால் இந்த மாதிரியான உணவுகளை தவிர்த்திடுங்கள்..
நாள் முழுக்க வேலை செய்த களைப்பில் தூங்கலாம் என்று தலை சாய்த்திருப்பீர்கள். ஆனால், தூக்கமே வந்திருக்காது. சிந்தனைகள் மட்டும் கொசுவர்த்திச் சுருள்போல ஓடிக்கொண்டே இருக்கும்.
மனஅழுத்தம் ஒரு முக்கியக் காரணம். இன்னொரு காரணம் இரவில் சாப்பிட்ட உணவாகக்கூட இருக்கலாம். இரவு உணவு சரியில்லையென்றால், அது தூக்கத்தை நிச்சயம் கலைக்கக்கூடும். அப்படி உங்கள் தூக்கத்தைக் கலைக்கும் உணவுகளைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்..
தக்காளி:
இரவில் தக்காளி சாப்பிட்டால், அது செரிமானமாக நீண்ட நேரம் ஆகும். அதிலும் தூங்குவதற்குச் சில மணி நேரங்களுக்குமுன் இதைச் சாப்பிட்டால் தூக்கமின்மை ஏற்பட வாய்ப்புள்ளது.
தக்காளியில் உள்ள அமிலங்கள் ஆசிட் ரிஃப்ளக்ஸ் பிரச்னையை ஏற்படுத்தும். இதனால் வயிற்றில் உள்ள அமிலங்கள் தவறான பாதையில் சென்று உணவுக்குழாய்க்கு திரும்பி வருவதால் வாய் வழியாக வெளியேறும்.
இது நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். நேராகப் படுக்கும்போது, நிலைமை இன்னும் மோசமாகும். எனவே, இரவில் தக்காளி சட்னி, தக்காளி சாஸ், தக்காளி சூப் போன்ற தக்காளி தொடர்பான எதையும் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.
துரித உணவுகள்:
துரித உணவுகள், சீன உணவுகளில் மோனோசோடியம் குளூட்டமேட்என்ற சோடியம் உப்பு அதிகமாக உள்ளது. இது மூளையைத் தூண்டிவிடும். அதனால் தூக்கமின்மை ஏற்படும். இதைத் தொடர்ந்து சாப்பிட்டால் தலைவலி, ஒற்றைத் தலைவலி, வயிறு வலி போன்ற பிரச்னைகள் வரும்.
சர்க்கரை:
சர்க்கரை சாப்பிட்டால், மூளையை இயல்புக்கு மாறாக ஆக்டிவ்வாக மாற்றும். மாலை நேரத்துக்கு மேல் சர்க்கரை அதிகமாக உள்ள உணவுகளைச் சாப்பிடுவது தூக்கமின்மைக்கு வழிவகுக்கும்.
அதேபோல், பகலிலும் சர்க்கரை நிறைந்த உணவுகளைச் சாப்பிட்டால், நடு இரவில் விழிப்பு வரும். அதாவது, தொடர்ந்து அதிகப்படியான சர்க்கரை நிறைந்த உணவுகளைச் சாப்பிடும்போது, கார்டிசால் எனும் ஹார்மோனை தூண்டி, நடுஇரவில் விழிப்பு வரும் நிலைக்குத் தள்ளிவிடும்.
மசாலா உணவுகள்:
காரமான உணவுகள் உடலுக்குச் சூட்டைத் தரக்கூடியவை. தக்காளியைப் போல ஆசிட் ரிஃபிளக்ஸை ஏற்படுத்தும் வாய்ப்புகளும் உள்ளன. எனவே நிம்மதியாகத் தூங்க முடியாது.
உடலுக்குள் உள்ள சூடு, மூளையைத் தூண்டிவிட்டு தூக்க உணர்வை போக்கிவிடும். எனவே, காரமான உணவுகள், மசாலா நிறைந்த உணவுகளை இரவில் தவிர்க்க வேண்டும்.
சாக்லட்:
காபியைவிட சாக்லேட்டில் கஃபெய்ன் குறைவுதான் என்றாலும் இதுவும் தூக்கத்தைக் கலைக்கக் கூடியவைதான். மாலையில் சாக்லேட் சாப்பிட்டால்கூட இரவில் தூக்கம் வராமல் தவிப்போம்.
ஏற்கெனவே சர்க்கரை தூக்கமின்மையை ஏற்படுத்தும் எனப் பார்த்தோம். சாக்லேட்டில் சர்க்கரையும் கஃபைனும் இருப்பதால் இரண்டுமே தூக்கத்தைக் கெடுக்கக்கூடியவை.
உருளைக்கிழங்கு, பூசணி, பிரெட், நூடுல்ஸ், பீட்சா போன்றவற்றில் கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளது. இந்த உணவுகள் உடலுக்குள் சேர்ந்து சீக்கிரமே சர்க்கரையாக மாறிவிடும்.
காரணம், இதெல்லாம் ஹை கிளைசமிக் உணவுகள். சர்க்கரையைச் சாப்பிட்டால் என்ன நடக்குமோ அதுவேதான் கார்போஹைட்ரேட் உணவுகளைச் சாப்பிட்டாலும் நடக்கும்.
காபி:
காபியில் கஃபெய்ன் அதிகம். இது உடனடி உற்சாகத்தைத் தரக்கூடியது. இதனால், காபியை இரவில் அருந்தினால் தூக்கம் வராமல் தவிக்க நேரிடும்.