டெல்லியில் 250 வார்டுகளுக்கு மாநகராட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்று காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை வாக்கு எண்ணிக்கையில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகிக்கும் நிலையில் தேவைக்கு அதிகமாகவே இடங்களை கைப்பற்றி விட்டது. அதாவது மொத்தமுள்ள 250 வார்டுகளில் 126 வார்டுகளை கைப்பற்றினால் போதுமானது. இதில் ஆம் ஆத்மி கட்சி 132 இடங்களையும், பாஜக 104 இடங்களையும், காங்கிரஸ் 7 இடங்களையும், சுயேச்சைகள் 3 இடங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக மாநகராட்சியில் ஆதிக்கம் செலுத்தி வந்த பாஜகவின் அதிகாரத்திற்கு தற்போது ஆம் ஆத்மி முற்றுப்புள்ளி வைத்து வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை ஆம் ஆத்மி கட்சியினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடுகிறார்கள். மேலும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மக்களின் முடிவை மாற்றியதற்கு நன்றி தெரிவித்ததோடு எங்களின் மீது நம்பிக்கை வைத்ததற்காக உங்களுக்காக நான் அயராது உழைப்பேன் என்று நம்பிக்கை வாக்குறுதி கொடுத்துள்ளார். மேலும் மக்களுக்காக சேர்ந்து பணி செய்வதற்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.