தலீபான் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றியதை தொடர்ந்து அதன் பெயரை மாற்றம் செய்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்கள் நடத்தி கடந்த 15 ஆம் தேதி அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். மேலும் ஆட்சி அதிகாரம் தலீபான் தீவிரவாதிகளின் வசம் சென்றுள்ளது. இந்நிலையில் தலீபான் தீவிரவாதிகள் பெண்களின் உரிமைகள் மதிக்கப்படும். அதனால் மக்கள் யாரும் அஞ்ச வேண்டிய அவசியமில்லை என்று அறிவித்துள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாக ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகள் நடந்து கொண்ட விதம் அந்நாட்டு மக்களிடையே கொடூர முகத்தை காட்ட ஆரம்பித்து விட்டார்கள் என்ற எண்ணத்தை உருவாக்கியுள்ளது. ஏனெனில் பொது இடத்தில் பர்தா அணியாமல் இருந்ததால் ஒரு இளம்பெண்ணை துப்பாக்கியால் சுட்டு துடிதுடிக்க கொலை செய்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பெண்கள் வேலைக்கு செல்லும் படி வற்புறுத்தியுள்ளனர். இதனையடுத்து ஷரியத் சட்டம் கண்டிப்பாக பின்பற்றப்படும் என்று தலிபான் தீவிரவாதிகள் கூறியுள்ளதால் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த மக்கள் அங்கிருந்து எப்படியாவது தப்பி செல்ல வேண்டும் என்ற விரக்தியில் உள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் கடந்த 1919 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றுள்ளனர். அதன் நினைவாக 102 ஆவது சுதந்திர தினத்தை கடந்த 19 ஆம்தேதி கொண்டாடியுள்ளது.
இதனைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தானை இஸ்லாமிய அமீரகம் என தலீபான் தீவிரவாதிகள் பெயர் சூட்டியதாக செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தலீபான்கள் ஆட்சி செய்த போதும் இந்த பெயர்தான் இருந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் தலீபான் தீவிரவாதிகள் புதிய அதிபர் மற்றும் புதிய அரசை உருவாக்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் புதிய அரசியலமைப்பு ஷரியத் சட்டப்படியே பின்பற்றப்படும் என்றும் அறிவித்துள்ளார்.