காபூல் விமான நிலையத்திலிருந்து மக்களை மீட்பதற்காக சென்ற உக்ரேனிய விமானம் கடத்தப்பட்டதாக கூறப்பட்டதையடுத்து அது பத்திரமாக தரையிறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான்கள் கடந்த 15 ஆம் தேதி கைப்பற்றியுள்ளனர். இதனால் ஆட்சி அதிகாரம் முழுவதும் தலீபான்களின் கைவசம் சென்றுள்ளது. அதனால் உயிருக்கு பயந்த மக்கள் ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பான சூழல் தொடர்ந்து நிலவி வருகின்றது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானிலிருந்து சொந்த நாட்டு மக்களை மீட்டு செல்வதற்காக காபூல் விமான நிலையத்திற்கு உக்ரேன் மீட்பு விமானம் ஒன்று சென்றுள்ளது. அந்த மீட்பு விமானம் கடத்தப்பட்டுள்ளதாக ரஷ்ய செய்தி ஊடகம் ஒன்று முதலில் தகவல் தெரிவித்துள்ளது. இதனையடுத்து விமானம் கடத்தப்பட்டு ஈரானுக்கு கொண்டு செல்லப்பட்டதாக உக்ரேனிய அமைச்சர் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் ஊடகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
ஆனால் இந்த செய்தி வெளியாவதற்கு முன்னரே காபூலில் இருந்து புறப்பட்டுள்ள உக்ரேன் மீட்பு விமானம் பத்திரமாக தரை இறங்கியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தானிலிருந்து புறப்பட்டுள்ள உக்ரேன் மீட்பு விமானம் ஈரானுக்கு சென்றுள்ளது. அதன்பின் காபூல் விமான நிலையத்தில் விமானத்திற்கு தேவையான எரிபொருள் கிடைக்காத சூழ்நிலையின் காரணமாக ஈரானில் பத்திரமாக தரையிறங்கி எரிபொருள் நிரப்பியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் ஈரான் விமான நிலையத்தில் பயணிகள் யாரும் இறங்கவில்லை. மேலும் விமான பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் அங்கு எதுவும் நடக்கவில்லை என்று ஈரானிலிருந்து உறுதி செய்யப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ஈரானில் இருந்து புறப்பட்டுள்ள உக்ரைன் மீட்பு விமானம் கீவில் பத்திரமாக தரையிறங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.