தலீபான்கள் காபூல் நகரத்தில் வாழும் மக்கள் வைத்திருக்கும் ஆயுதங்கள், வெடிபொருட்கள் உட்பட பிற அரசு பொருட்கள் அனைத்தையும் எமிரேட் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல் நடத்தி அந்நாட்டை கடந்த 15 ஆம் தேதி கைப்பற்றியுள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அதிலிருந்து தலீபான்களின் ஆதிக்கம் ஆப்கானிஸ்தானில் அதிகரித்துள்ளது. இதனால் உயிருக்கு பயந்த ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் சொந்த நாட்டில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனையடுத்து தலீபான்கள் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானிலிருந்து அனைத்து வெளிநாட்டு படைகளும் வெளியேற வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். அதற்கு பிறகுதான் ஆப்கானிஸ்தானில் புதிய அரசாங்கம் அமைப்பது குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும் எனவும் கூறியுள்ளனர்.
இதற்கிடையில் ஆப்கானிஸ்தானில் இசைக்குத் தடை மற்றும் பெண்கள் மூன்று நாட்களுக்கு அதிகமாக பயணம் செய்வதாக இருந்தால் பாதுகாவலர் துணையுடன் தான் செல்ல வேண்டும் என்னும் புதிய விதிமுறைகளை தலீபான்கள் அமுல்படுத்தியுள்ளனர். இந்நிலையில் தலீபான் செய்தி தொடர்பாளர் Zabihullah Mujahid டுவிட்டரில் கூறியதாவது “ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் நகரத்தில் வாழும் மக்கள் வைத்திருக்கும் போக்குவரத்து வாகனங்கள், ஆயுதங்கள், துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் பிற அரசு பொருட்கள் உட்பட அனைத்தையும் 7 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட எமிரேட் அதிகாரிகளிடம் தானாகவே ஒப்படைக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.