தலீபான்களின் கைகளில் கோடிகணக்கானோரின் விவரங்கள் நிறைந்த கருவி ஓன்று சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான் தீவிரவாதிகள் கண்ணிமைக்கும் நேரத்தில் கைப்பற்றியுள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரமான காபூல் நகரையும் தன்வசப்படுத்தியுள்ளனர். இதனைத்தொடர்ந்து தலீபான் தீவிரவாதிகளிடம் அதிகாரம் சென்றதிலிருந்து அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியுள்ளது. இந்நிலையில் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வந்த நாட்களில் சேகரித்த பயோமெட்ரிக் தகவல்கள் தலீபான்களின் கைகளில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது அமெரிக்க படைகள் தீவிரவாதிகளின் தகவல்களை திரட்டுவதற்காக இந்த பயோமெட்ரிக் தகவல்களை சேகரித்ததாக கூறப்பட்டுள்ளது. இதில் அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் தொழிலாளிகளின் கைரேகைகளில் தொடங்கி குடும்ப உறுப்பினர்கள் தொடர்பான அனைத்து தகவல்களும் இடம் பெற்றுள்ளது.
இதனையடுத்து தலீபான் தீவிரவாதிகள் காபூல் நகருக்குள் நுழைந்த சில மணி நேரத்திற்குள் இந்த பயோமெட்ரிக் தகவல்கள் சேகரிக்கப்பட்ட கருவியை கைப்பற்றியுள்ளனர். மேலும் இதில் 2.5 கோடி பேர்களின் மொத்த விவரங்களும் பதிவாகியுள்ளது. இதனை தலீபான்கள் ஆராய்ந்து பார்த்தால் அவர்களுக்கு அமெரிக்க படையுடன் இணைந்து செயல்பட்ட ஆப்கானிஸ்தான் மக்களின் விவரங்கள் தெரிந்து விடும். இதனால் தலீபான் தீவிரவாதிகள்கள் எதிரிகளை கண்டுபிடித்து பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடலாம். இது தற்போது அமெரிக்கா உள்ளிட்ட குறிப்பிட்ட நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த பயோமெட்ரிக் தகவல்கள் சேகரிக்கப்பட்ட கருவி குறித்து அமெரிக்க அரசு கூறியதாவது “அந்தக் கருவியை தலீபான் தீவிரவாதிகளால் பயன்படுத்த முடியாது. அதை பயன்படுத்துவதற்க்கான தகுந்த நிபுணர்கள் அவர்களிடம் இல்லை. மேலும் தலீபான் தீவிரவாதிகளுக்கு ஆதரவளித்த பாகிஸ்தான், ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகளால் அவர்களுக்கு பேராபத்து வரலாம்” என சுட்டிக் காட்டியுள்ளனர்.