காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தப் போவதாக ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டை கண்ணிமைக்கும் நேரத்தில் கைப்பற்றியுள்ளனர். அதிலிருந்து ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரம் முழுவதும் தலீபான்களின் கைவசம் சென்றுள்ளது. இதனால் தலீபான்களின் ஆதிக்கம் ஆப்கானிஸ்தானில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக உயிருக்கு பயந்த ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனையடுத்து ஆப்கானிஸ்தான் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக காபூல் விமான விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர்.
இவ்வாறு மக்கள் கூட்டம் காபூல் விமான நிலையத்தில் அலை மோதுவதால் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அங்கு பதட்டமான சூழ்நிலையே தொடர்ந்து நிலவி வருகின்றது. அதாவது காபூல் விமான நிலையத்திலிருந்து கடந்த பத்து நாட்களில் தோராயமாக 82 ஆயிரம் மக்கள் மீட்பு விமானங்கள் மூலம் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் காபூல் விமான நிலையத்திற்கு வெளியில் மக்கள் கூட்டம் குறையாமல் இருக்கின்றது. இதற்கிடையில் வருகின்ற ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் வெளிநாட்டுப் படைகள் எல்லாம் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என தலீபான்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி மக்களை மீட்கும் பணியானது உலக நாடுகள் முழுவதும் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதனைத்தொடர்ந்து தலீபான்கள் வரும் ஆகஸ்டு 31 ஆம் தேதிக்கு பின்னர் கால அவகாசத்தை நீட்டிக்க முடியாது என தெரிவித்துள்ளனர். அதே சமயத்தில் வெளிநாட்டுப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து மக்கள் அனைவரும் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்கு பின்னரும் வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என தலீபான்கள் கூறியதாக அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் அறிவித்துள்ளார். எனினும் தலீபான்களின் வாக்குறுதியை நம்ப முடியுமா என்ற கேள்வியும் எழும்பியுள்ளது. இந்நிலையில் காபூல் விமான நிலையத்துக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்த போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதாவது “ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் விமான நிலையத்துக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் தாக்குதல் எச்சரிக்கை விடுத்துள்ளதால் அமெரிக்காவின் மீட்பு விமான சேவைகள் விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படும்” என கூறியுள்ளார். ஆனால் ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக இன்னும் பத்தாயிரம் பேர் காபூல் விமான நிலையத்தில் காத்திருப்பதாக அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் தெரிவித்துள்ளது. அதன்பின் ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு வெளியேற விரும்பும் மக்கள் பலர் காபூல் விமான நிலையத்தை அடைய முடியாமல் தவிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் காபூல் விமான நிலையத்துக்கு ஐ.எஸ் தீவிரவாதிகளின் தாக்குதல் பயம் இருப்பதால் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே இருக்கும் தங்கள் நாட்டு மக்களை உடனடியாக அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்கு சென்று விடுமாறு வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக காபூல் விமான நிலையத்தில் உள்ள அனைத்து நுழைவு வாயில்கள் வழியாகவும் அமெரிக்கர்கள் வெளியேறி விடுமாறு அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. இதுபோன்று இங்கிலாந்து மக்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விடுமாறு வலியுறுத்தியுள்ளது. இதனால் ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் விமான நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.