தலீப்பான் தீவிரவாதிகள் மக்களை காபூல் விமான நிலையத்திற்குள் செல்லவிடாமல் நுழைவு வாயிலிலேயே தடுத்து துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீப்பான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கண்ணிமைக்கும் நேரத்தில் கைப்பற்றியுள்ளனர். இதனால் அங்கு தலீப்பான்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. அந்த வகையில் கடந்த 15 ஆம் தேதி அமெரிக்காவின் C-17 எனும் சரக்கு விமானம் ஒரே பயணத்தில் 640 பேரை ஏற்றி கொண்டு காபூலில் இருந்து புறப்பட்டுள்ளது. ஆனால் தற்போது பதினெட்டு சரக்கு விமாங்கள் நேற்றிரவு காபூலில் இருந்து புறப்பட்டுள்ளது. அதில் ஒரு விமானத்தில் சராசரியாக 110 பயணிகள் வீதம் மொத்தம் 2,000 பேர் மட்டுமே அமெரிக்காவிற்கு நாடு திரும்பியுள்ளனர்.
தற்போதைய இந்த நிலைக்கு காரணம் காபூல் விமான நிலையத்திற்குள் மக்களை செல்லவிடாமல் தடுத்து நுழைவு வாயிலில் தலீப்பான் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தி அச்சுறுத்தி வருவதேயாகும். இதனால் காபூல் விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் 50 ஆயிரம் பேர் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டவர்களும் உள்ளே செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அமெரிக்கா ஒரு நாளைக்கு 9000 பேர் வீதம் ஆப்கானிஸ்தானில் இருந்து இரண்டு நாட்களில் 20 ஆயிரம் பேரை மீட்பதாக உறுதியளித்துள்ளது. ஆனால் தற்போது அவர்களால் 10 சதவீதம் பேரை மட்டுமே மீட்க முடிந்துள்ளது.
மேலும் கடந்த 17ஆம் தேதி காபூலில் இருந்து புறப்பட்ட Airbus A-400M ரக ஜேர்மன் விமானத்தில் வெறும் 7 பேர் மட்டுமே பயணித்துள்ளனர். இதற்கிடையில் பிரித்தானியாவில் 7000 பேரை அழைத்துச் செல்வதாக உறுதியளித்துள்ள நிலையில் தற்போது 1000 பயணிகளை மட்டுமே நாடு கடத்தியுள்ளது. இதனையடுத்து அவுஸ்திரேலியாவின் ஹெர்குலஸ் சி -130 விமானம் கடந்த 18 ஆம் தேதி வெறும் 26 பேருடன் புறப்பட்டுள்ளது. அதேபோல் நெதர்லாந்தின் Boeing C-17 விமானம் 41 பேருடன் நாடு திரும்பியுள்ளது. இவ்வாறு மிகக் குறைந்த அளவு பயணிகளை மட்டுமே ஏற்றிக்கொண்டு பல நாடுகளின் விமானங்கள் காபூலில் இருந்து புறப்பட்டு நாடு திரும்பியுள்ளது. இந்த நிலையில் பல மேற்கத்திய நாடுகள் இந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்து ஒரு லட்சம் மக்களை ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.