பாலக்கீரையில் சுவையும் ஆரோக்கியமும் அதிகம் உள்ளது. சுவையான சாம்பாரும் செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சாம்பார் பொடி – 2 டேபிள் ஸ்பூன்
புளி ஒரு – எலுமிச்சை அளவு
மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்
தக்காளி – 2
சின்ன வெங்காயம் – 100
வேக வைத்த துவரம்பருப்பு – 1 கப்
பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்
கொத்தமல்லி தழை – தேவையான அளவு
பாலக்கீரை – ஒரு கட்டு
உப்பு – தேவையான அளவு
தாளிக்க தேவையானவை:
கடுகு, உளுந்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
வெந்தயம் – அரை டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்
வத்தல் – 2
கறிவேப்பிலை – தேவையான அளவு
செய்முறை:
முதலில் கீரையை எடுத்து நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி தழை இவை அனைத்தையும் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கீரையை வேக வைத்து கொள்ளுங்கள். பிறகு கீரை வெந்ததும் அதை மத்தால் கடைந்து கொள்ளுங்கள். கடைந்த கீரையோடு நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து நன்றாக வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் மஞ்சள் தூள், சாம்பார் தூள் சேர்த்து நன்றாக பச்சை வாடை நீங்கும் வரை மிதமான சூட்டில் கொதிக்க விடவேண்டும். பின்னர் கரைத்து வைத்திருக்கும் புளி கரைசலை ஊற்ற வேண்டும். பிறகு நாம் நன்றாக வேகவைத்து வைத்திருக்கும் துவரம் பருப்பை எடுத்து இதனுள் சேர்த்து கொள்ளுங்கள். பின்னர் உப்பு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் மூடி வைத்து கொதிக்க விடவேண்டும்.
கொதித்து வந்ததும், அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் தேங்காய் எண்ணெய் 2 டீஸ்பூன் ஊற்றுங்கள். எண்ணெய் சூடானதும் கடுகு உளுந்தம்பருப்பு, சீரகம் வெந்தயம் சேர்த்து தாளித்து அதில் ஊற்றவேண்டும். ஊற்றிய பின் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லித் தழையையும் தூவி இறக்கி விடுங்கள். இப்பொழுது சூடான சாதத்தில் சிறிது நெய் சேர்த்து சாப்பிட்டால் ருசி மணம் அருமையாக இருக்கும்.