ஆசிரியையிடம் நகை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை என்.ஜி.ஓ.சி காலனி பகுதியில் ஜெகதாம்பிகை என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஜெகதாம்பிகை பள்ளியில் பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் திடீரென ஜெகதாம்பிகையின் கழுத்தில் அணிந்திருந்த 5 1/2 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து ஜெகதாம்பிகை பாளையங்கோட்டை பெருமாள்புரம் குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.