ஆசிரியை தனது கணவரை கட்டையால் தாக்கி கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள அத்தனூர்பட்டி பகுதியில் பட்டதாரியான மணிகண்டன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு இளமதி என்ற மனைவி உள்ளார். இவர் வி. மன்னார் பாளையம் பகுதியில் பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வருகின்றார். இந்த தம்பதிகளுக்கு தக்சிந்த் என்ற மகனும், அக்சிதா என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே மணிகண்டனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் மணிகண்டன் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு சென்று தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனையெல்லாம் இளமதி சகித்துக் கொண்டு தனது குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் மணிகண்டன் வழக்கம் போல் மது குடித்துவிட்டு வீட்டிற்கு சென்று மனைவி மற்றும் குழந்தைகளுடன் தகராறில் ஈடுபட்டு அவர்களை தாக்கியுள்ளார். இதனையடுத்து இளமதி குழந்தைகளையும், தன்னையும் தாக்குவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் கோபமடைந்து திடீரென அங்கிருந்த கட்டையை எடுத்து தனது கணவரை தாக்கி விட்டார். இதனால் மணிகண்டன் பலத்த காயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணிகண்டனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினர் ஆசிரியையான இளமதியிடம் நடத்திய விசாரணையில் அவரும், மணிகண்டன் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதும், ஒரே கல்லூரியில் படித்ததால் காதல் ஏற்பட்டு இரண்டு வீட்டாரின் விருப்பத்தை மீறி திருமணம் செய்து கொண்டனர் என்பதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் மணிகண்டனுக்கு சென்னையில் உள்ள அரசு பூம்புகார் வளாகத்தில் வேலை கிடைத்துள்ளது. ஆனால் மணிகண்டன் வேலைக்குச் சென்ற சில நாட்களிலேயே அலுவலகத்தில் பிரச்சினை ஏற்பட்டதால் அவரை பணியிடை நீக்கம் செய்து விட்டனர் என்று தெரியவந்துள்ளது. இதனையடுத்து இளமதிக்கு அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணி கிடைத்துள்ளது. இதனால் மணிகண்டன் தனது குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.
அங்கு சென்று மணிகண்டனுக்கு எந்த ஒரு வேலையும் கிடைக்காததால் தனது குழந்தைகளைப் பார்த்துக் கொண்டு வீட்டிலேயே இருந்ததால் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார் என்று தெரியவந்துள்ளது. இதனால் மணிகண்டன் தினமும் மது குடித்துவிட்டு சென்று இளமதி மற்றும் பிள்ளைகளிடமும் தகராறு செய்து வந்ததால் கோபமடைந்த அவரை கட்டையால் தாக்கி கொலை செய்தது தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தனது கணவரை கட்டையால் தாக்கி கொலை செய்த குற்றத்திற்காக ஆசிரியையான இளமதியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.