ஆசிரியரிடம் தங்கச்சங்கிலி பறித்து சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காடு பகுதியில் ஆசிரியரான செல்வி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 11 – ஆம் தேதி அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து ஆசிரியரான செல்வி அணிந்திருந்த 15 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து செல்வி ஆற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வந்தனர். இந்நிலையில் ஆற்காட்டில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் செய்யாறு பகுதியில் வசிக்கும் மொதீன்கான், ஜாபர்கான் என்பதும் அவர்கள் இருவரும் ஆசிரியரான செல்வி கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இருவரும் ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் மொதீன்கான் மற்றும் ஜாபர்கான் இருவரையும் கைது செய்ததோடு அவர்களிடமிருந்து 24 பவுன் தங்கச்சங்கிலி மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.