வீட்டிலேயே குழந்தை பெற்ற இளம் பெண்ணை உறவினர்கள் 1 1/2 கிலோ மீட்டர் தூரம் சிகிச்சைக்காக தொட்டிலில் சுமந்து சென்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள தாளமொக்கை ஆதிவாசி கிராமத்தில் 19 வயதான கர்ப்பிணி பெண் வசித்து வருகிறார். இந்நிலையில் திடீரென இந்த இளம் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் 7-ஆம் மாதத்திலேயே அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. ஆனால் தொப்புள்கொடி முழுமையாக வெளியே வராததால் இளம்பெண்ணுக்கு அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சந்திரிகா தலைமையிலான மருத்துவ குழுவினர் அங்கு விரைந்து சென்று இளம்பெண்ணுக்கு சிகிச்சை அளித்துள்ளனர். அதன் பிறகு மருத்துவர்கள் அந்த இளம்பெண்ணை மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
ஆனால் அந்த ஆதிவாசி கிராமத்திற்கு சென்று வர சாலை வசதி இல்லாததால் ஆம்புலன்சை கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த இளம் பெண்ணின் உறவினர்கள் தாய்-சேய் இருவரையும் தொட்டில் கட்டி சுமார் 1 1/2 கிலோ மீட்டர் தூரம் சுமந்து சென்றுள்ளனர். அதன் பிறகு மருத்துவர்கள் தாய்-சேய் இருவரையும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இவ்வாறு தொட்டில் கட்டி இளம்பெண்ணை சுமந்து சென்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறும் போது அவசர தேவைக்கு சென்று வர இயலாததால் எங்கள் கிராமத்தில் சாலை வசதியை மேம்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.