நவரை பட்டத்தில் 2,000 ஏக்கருக்கு நெற்பயிர் நாற்று நடும் பணி தற்போது நடைபெற்று வருவதால் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா.பழூர் பகுதியில் ஏராளமான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் 2,000 ஏக்கர் நிலப்பரப்பில் நவரை பட்ட நெற்பயிர் 5,000 ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா சாகுபடி செய்கின்றனர். இந்த ஆண்டு சம்பா பருவத்தில் நெற்பயிர்கள் விளைந்து அறுவடைக்குத் தயாராக இருந்த போது மழை பெய்ததால் நெற்பயிர்கள் அனைத்தும் முற்றிலும் சேதம் அடைந்தது. இதனால் விவசாயிகள் மிகுந்த வருத்தம் அடைந்தனர்.
இந்நிலையில் விவசாயிகள் நவரை பட்டத்தில் 2,000 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்பயிர் நாற்றுகளை விளைவித்துள்ளனர். ஏற்கனவே சம்பா பருவத்தில் நெற்பயிர்கள் சேதம் அடைந்ததால் இந்த நவரை படத்திலாவது நெற்பயிர்களை விளைவித்து நல்ல மகசூலைப் பெற வேண்டும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் நாற்று நடவு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் .மேலும் இந்த நவரைபட்ட நெற் பயிர்களுக்குத் தேவையான தண்ணீரை மின்விசை மோட்டார்கள் மூலம் ஆள்துளை கிணற்றிலிருந்து எடுத்து பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் கொரோனா தொற்று அதிகமாக பரவுவதால் நாற்று நடவு பணிக்கு ஆட்கள் கிடைக்காமல் மிகுந்த சிரமப்பட்டு கூலித் தொழிலாளர்களைத் திரட்டி விவசாயிகள் நாற்று நடவு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் விவசாயிகள் தடையில்லாமல் மின்சாரம் கிடைப்பதற்கு அரசு உறுதி அளிக்க வேண்டும் என்றும் தட்டுப்பாடு இல்லாமல் மானிய விலையில் உரங்கள் கிடைக்க நடவடிக்கை வேண்டும் என்றும் கோரிக்கையை விடுத்துள்ளனர்.