அமெரிக்காவில் ஆற்றில் சிக்கிய சிறுவர்களைக் காப்பாற்ற முயன்ற இளைஞர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் பெர்ஷ்னோ நகரில் மஞ்சித் சிங் என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் சென்ற புதன்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கின்ற கிங்ஸ் ஆற்றுக்கு தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சென்றுள்ளார். அச்சமயத்தில் 2 சிறுமிகளும், 1 சிறுவனும் ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருப்பதை கண்ட அவர், உடனடியாக மூன்று சிறுவர்களையும் காப்பாற்றுவதற்கு முயற்சி செய்துள்ளார். அப்போது தனது தலையில் அணிந்திருந்த டர்பனை கழற்றி கயிறாகப் பயன்படுத்தி சிறுவர்களை மீட்பதற்கு முயற்சி செய்துள்ளார்.
ஆனால் அவ்வாறு மீட்க முடியாததால் சிறுவர்களை காப்பாற்றுவதற்கு மன்ஜித் சிங் ஆற்றுக்குள் குதித்துள்ளார். அப்போது திடீரென நீரின் வேகம் அதிகரித்ததால் அவர் ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பின்னர் இந்த சம்பவம் பற்றி தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் வருவதற்குள் அருகில் இருந்தவர்கள் மூன்று சிறுவர்களையும் ஆற்றிலிருந்து மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மஞ்சித் சிங்கின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.