ஆயுதப்படை காவலர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ்(26). இவர் 2013ஆம் ஆண்டு காவலர் பயிற்சியில் தேர்வாகி புதுப்பேட்டையில் ஆயுதப் படை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி முதல் சுரேஷ் பணிக்கு வரவில்லை. மேலும் கடந்த 19ஆம் தேதி முதல் காவல் நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். இதுதொடர்பாக சக காவலர்கள் தொலைபேசி வாயிலாக கேட்ட போது சில தனிப்பட்ட காரணங்களுக்காக தங்கியிருப்பதாக சுரேஷ் கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு உணவு உண்ண கூட சுரேஷ் அறையிலிருந்து வெளியில் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.
நீண்ட நேரமாகியும் அவர் வெளியில் வராததால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் மாற்று சாவியை பயன்படுத்தி அறையை திறந்து பார்த்துள்ளனர். உள்ளே சென்று பார்த்தபோது விஷம் அருந்திய நிலையில் சுரேஷ் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த விடுதி ஊழியர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர் . விடுதி ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .
மேலும் அவர் எழுதிய கடிததத்தை காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர்.அக்கடிதத்தில் தனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என்றும் யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சுரேஷ் எழுதியிருந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர். சுரேஷின் தற்கொலைக்கு காரணம் காதல் பிரச்சினையா அல்லது பணிச்சுமையா அல்லது உயர் அலுவலர்கள் ஏதேனும் கொடுத்த அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்று பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.