ஆழ்குழாய் அமைக்கும் பணியை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அஞ்சுக்கோட்டை, கல்லூர், தளிர் மருங்கூர், முகிழ்தகம், புல்லக்கடம்பன், சிறுகம்பையூர், கொடிபங்கு மற்றும் வட்டானம் ஆகிய கிராமங்களில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் இப்பகுதி விவசாயிகளுக்கு நெட்டை ரக தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மழை நீரை சேமித்து வைத்து விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுவதற்கு பண்ணை குட்டைகளும் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில் வேளாண்மை துணை இயக்குனர் சேக் அப்துல்லா இத்திட்டத்தின் கீழ் தளிர் மருங்கூரில் தரிசு நிலத்தை சுத்தம் செய்து ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியையும், அஞ்சுக்கோட்டை, முகிழ்தகம் கிராமங்களில் நடப்பட்டுள்ள தென்னங்கன்றுகள் மற்றும் பண்ணைக் குட்டைகளையும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது வேளாண்மை உதவி இயக்குனர் ராஜலட்சுமி, வேளாண்மை அலுவலர் வினோத்குமார், துணை வேளாண்மை அலுவலர் ஆறுமுகம், உதவி வேளாண்மை அலுவலர்கள் திவாகர், கலைவாணி, பதிராஜன், சதீஷ், ரமணன் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் வேல்முருகன், உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.