மிசோரத்தில் கண்டெடுக்கப்பட்ட 120 தலை முடி மூட்டைகளுக்கும், திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்திற்கும் சம்பந்தம் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள திருப்பதியில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடாஜலபதி திருக்கோவில் மிகவும் புகழ் பெற்றதாகும். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சென்று சுவாமியை தரிசித்துவிட்டு வேண்டுதலுக்காக தங்களது தலைமுடியை காணிக்கையாக வழங்குவது வழக்கம். இவ்வாறு காணிக்கையாக வழங்கப்படும் தலைமுடி தேவஸ்தான நிர்வாகத்தால் ஏலம் விடப்பட்டு பல்வேறு பயன்பாட்டிற்காக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி மிசோரம் மாநிலத்தில் உள்ள சுங்டே என்னும் பகுதியில் அசாம் ரைபிள் படை பிரிவினரால் 120 முட்டைகளில் தலைமுடி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து சுமார் 2 கோடி மதிப்புள்ள இந்த தலைமுடிகள் திருமலையில் பக்தர்கள் காணிக்கையாக அளித்த முடி எனவும், தாய்லாந்து வழியாக சீனாவிற்கு கடத்துவதற்கு முயற்சி செய்கின்றனர் எனவும் பல்வேறு தரப்பினர் தங்களது குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர்.
இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இ-ஏலம் முறைப்படி ஒவ்வொரு காலாண்டிலும் காணிக்கையாக திருமலையில் வழங்கப்படும் முடிகள் பல்வேறு நபர்களுக்கு மற்றும் சர்வதேச நிறுவனங்களுக்கு முறைப்படி ஏலம் விடப்படும் என தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 6.72 லட்சம் பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக அளித்துள்ளனர் எனவும், கடந்த நிதியாண்டில் மட்டும் தலைமுடி 125 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதன் பின் 2021-22 ஆம் நிதியாண்டில் தலைமுடி 131 கோடி ரூபாய்க்கு ஏலம் போகும் என திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் சார்பில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மிசோரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த 120 தலைமுடி மூட்டைகளும், திருப்பதி தேவஸ்தானத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என கூறியுள்ளனர். இதுகுறித்து தேவஸ்தான செயல் அதிகாரி கூறும்போது, திருப்பதியில் காணிக்கையாக அளிக்கப்படும் முடிகள் பலத்த பாதுகாப்புடன் சேமிக்கப்படுவதால் அங்கிருந்து ஒரு தலைமுடி கூட திருடு போக எந்தவித வாய்ப்பும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.