வங்காளதேச அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஹசன் அலி 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.
பாகிஸ்தான்-வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய வங்காள தேச அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் குவித்தது. இந்நிலையில் 2-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் லிட்டன் தாஸ் 114 ரன்னில் வெளியேற , அடுத்ததாக முஷ்பிகுர் ரஹிம் 91 ரன்னில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர் .இறுதியாக வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 330 ரன்கள் குவித்தது.
இதில் பாகிஸ்தான் அணி தரப்பில் ஹசன் அலி 5 விக்கெட்டும், ஷாஹீன் அப்ரிடி மற்றும் பஹீம் அஷ்ரப் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.இதன் பிறகு பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது .இதில் தொடக்க வீரர்களாக அபித் அலி, அப்துல்லா ஷபிக் களமிறங்கினர்.இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்து அசத்தினர். இதனால் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 145 ரன்கள் குவித்துள்ளது. இதில் அபித் அலி 93 ரன்களும் , ஷபிக் 52 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.