சரக்கு ஆட்டோ மற்றும் அதிலிருந்து சுமார் 400 கிலோ புகையிலை பொருட்கள் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் கே.புதுப்பட்டி அருகேயுள்ள புதுக்கோட்டை மாவட்ட எல்லையான சுகந்திரபுரம் சோதனைச்சாவடி அருகே கே.புதுப்பட்டி காவல்நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி தலைமையிலான காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது புதுக்கோட்டையிலிருந்து புதுவயல் நோக்கி சென்ற சரக்கு ஆட்டோவை மறித்து சோதனை செய்து பார்த்தபோது, அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தன..
இதையடுத்து சரக்கு ஆட்டோ டிரைவர் ஆனந்தை(வயது 28) காவல்துறையினர் கைது செய்து, சரக்கு ஆட்டோ மற்றும் அதிலிருந்து சுமார் 400 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். டிரைவர் ஆனந்தை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையிலடைத்தனர்.