Categories
உலக செய்திகள்

அபுதாபியில் முதல் இந்து கோவில்…!!

அபுதாபியில் கட்டப்பட்டு வரும் முதல் ஹிந்து கோவிலின்  கட்டுமான பணிகள் குறித்து ஐக்கிய அரபு அமீரக வெளியுறவுத் துறை அமைச்சர் சேக் அப்துல்லாபின் செய்யது அல்நகான் ஆய்வு மேற்கொண்டார்.

வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்களில் 30 சதவீதம் பேர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் வசிக்கின்றனர். இவர்களின் கோரிக்கையை ஏற்று அந்த நாடு அளித்த  அனுமதியின் பெயரில் அபுதாபியில் முதல் இந்து கோயிலுக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு ஏப்ரலில் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு டிசம்பர் மாதத்தில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.

இந்த நிலையில்  கோவில் கட்டுமான பணிகள் குறித்து அதன் நிர்வாகிகளிடம் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் கேட்டறிந்துள்ளார். கட்டுமானம் குறித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கொரோனா பாதிப்பு சவால்களுக்கு இடையே அபுதாபியில் இந்து  கோவில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவது இரு நாடுகளிடையேயான தனித்துவம் வாய்ந்த நட்புறவை மேலும் வலுப்படுத்த உதவும் என்று நம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயில் கட்டுமான பணிகள் முன்னேற்றம் குறித்து அண்மையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அதன் நிர்வாகிகளிடம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷேக் அப்துல்லா கேட்டறிந்தார். ஒரு மணிநேரம் நடைபெற்ற கூட்டத்தில் அமைதியான அனைவருக்குமான எதிர்காலத்தை உருவாக்க அபுதாபி பட்டத்து இளவரசர் மேற்கொண்டு வரும் திட்டங்கள் குறித்து வெளியுறவு அமைச்சர் விளக்கினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |