குளிர்சாதன பேருந்துகளை இயக்குவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா தொற்று அச்சம் காரணமாக கடந்த ஆண்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மார்ச் மாதம் முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதன்பின் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டும், குளிர்சாதன வசதியுள்ள பேருந்துகளை இயக்க அரசு அனுமதி தரவில்லை. இந்நிலையில் தற்போது 70 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதோடு ஆம்னி பேருந்துகள் வழக்கம்போல் இயங்குகின்றன. ஆனால் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள 600 க்கும் மேற்பட்ட குளிசாதன பேருந்துகள் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் போக்குவரத்து கழகங்கள் ஓடாமல் உள்ள அரசு பேருந்துகளை மீண்டும் இயக்குவதற்கு தயாராக உள்ளன என்று தெரிவித்துள்ளது.
ஏனெனில் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் உள்ள 340 ஏசி பேருந்துகள் இயங்காமல் இருப்பதால் போக்குவரத்து கழகத்திற்கு இது பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. எனவே இந்த பேருந்துகளை இயக்குவதற்கு உரிய நடவடிக்கையை எடுத்து வரும் நிலையில் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தெரியவந்துள்ளது. மேலும் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மற்றும் கல்லூரிகள் வருகின்ற திங்கட்கிழமை திறக்கப்படவுள்ளது. இதன் காரணத்தால் சென்னையில் பேருந்து தேவையானது அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், கூடுதலாக பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்து கழகம் தயார் நிலையில் இருக்கின்றது. மேலும் தற்போது இயக்கப்படும் 2600 பேருந்துகளில் தினமும் 20 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர்.இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது மாணவர்களின், தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகம் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.