டிப்பர் லாரி மோதி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவெண்காடு பகுதியில் வசித்து வருபவர் துரை. இவருடைய மகன் விஷ்ணு என்பவர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று காலை ராதாநல்லூர் மெயின் ரோடு பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் எதிரே வந்த டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக விஷ்ணு வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி உள்ளது.
இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.