கார் லாரி மீது மோதிய விபத்தில் பெண் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள தென்னிலை பகுதியில் இதயதுல்லா-சிராஜ் நிஷா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு அப்பாஸ் என்ற மகன் உள்ளார். இவர்கள் பூ வியாபாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று சிராஜ் நிஷா மற்றும் அப்பாஸ் இருவரும் பூ வாங்குவதற்காக காரில் நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் கரூரில் இருந்து கோவை செல்லும் சாலையில் தென்னிலை பகுதியில் கார் சென்று கொண்டிருக்கும் போது முன்னால் சென்ற லாரி திடீரென வலது பக்கமாக திரும்பி உள்ளது.
இதனால் லாரியில் மோதி விடக்கூடாது என்பதற்காக அப்பாஸ் காரில் பிரேக் பிடித்துள்ளார். ஆனால் கார் நிற்காமல் லாரியின் மீது மோதியுள்ளது. இதில் சிராஜ் நிஷா மற்றும் அப்பாஸ் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்துள்ளனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலன் அளிக்காத காரணத்தினால் சிராஜ் நிஷா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்து தென்னிலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.