டிராக்டர் மோதி செவிலியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள புவனகிரி உடையூர் கிராமத்தில் இளங்கோவன்-உஷா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். உஷா எடமணல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிராம சுகாதார செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் நேற்று எடமணல் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று விட்டு அங்கு பணியை முடித்த பின்னர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் குலோத்துங்கநல்லூர் பகுதிக்கு சென்று உள்ளார். அங்கு புதிதாக பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி போடும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார்.
அதன்பின் அவர் அங்கிருந்து தனது இருசக்கர வாகனத்தை எடுப்பதற்காக நடந்து சென்றுள்ளார். அந்த சமயத்தில் கரி ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த டிராக்டர் ஒன்று உஷா மீது மோதி உள்ளது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த புதுப்பட்டினம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் டிரைவர் தப்பி ஓடி விட்டதால் அவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.