இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையிலிருந்து கரூர் மாவட்டத்திற்கு கன்டெய்னர் லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அதேபோல் கரூர் பகுதியில் இருந்து திருச்சிக்கு கிரஷர் மண் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. இந்த இரண்டு லாரிகளும் நேற்று அதிகாலை 4 மணி அளவில் குளித்தலை பகுதியில் நேருக்கு நேர் மோதிக் கொண்டுள்ளது. இதில் இரண்டு லாரிகளும் சுக்குநூறாக நொறுங்கி உள்ளது.
இந்த விபத்து குறித்து அவ்வழியாக சென்றவர்கள் தீயணைப்புத் துறையினரும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த கண்டெய்னர் லாரியில் வந்த சண்முகம் என்பவரையும் கிரஷர் மண் ஏற்றி வந்த லாரி டிரைவரான முருகேசன் என்பவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அதன்பின் இடிபாடுகளில் சிக்கிய கண்டெய்னர் லாரியின் டிரைவரை மீட்பதற்கு பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு சடலமாக மீட்டுள்ளனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.