இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள அய்யன்கோட்டை பகுதியில் ஹரிஹர சுரேந்திரன் என்பவர் வசித்து வந்தார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். கப்பலூர் பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுவதால் ஹரிஹர சுரேந்திரனின் நண்பர்கள் அவரை தடுப்பூசி போடுவதற்காக அழைத்துள்ளனர். இதனால் அவர் தன்னுடைய இருசக்கரவாகனத்தில் தடுப்பூசி போடுவதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.
இவர் வாடிப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது கப்பலுர் அருகே வேகமாக வந்த லாரி ஒன்று ஹரிஹர சுரேந்திரன் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.