மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தம்பதி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பந்தநல்லூர் கிராமத்தில் சோமு-மீனா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு ரமேஷ் என்ற மகன் உள்ளார். இவர்கள் 3 பேரும் பாலக்கரையில் உள்ள ஒரு ஹோட்டலில் சமையல் செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அந்த சமயத்தில் கள்ளபுலியூர் அருகில் வந்த கார் இவர்கள் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் சோமுவும் மீனாவும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் ரமேஷ் பலத்த காயம் அடைந்துள்ளார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோமு மற்றும் மீனா உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் காயமடைந்த ரமேஷை அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரான கோபிநாத் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.