பேருந்தின் படிக்கட்டிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள எம்.வி.குப்பம் கிராமத்தில் அப்ரோஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆம்பூரில் உள்ள ஒரு ஷூ கம்பெனியில் சமையல் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அப்ரோஸ் வேலைக்கு சென்று விட்டு ஆம்பூரில் இருந்து அரசு டவுன் பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது அழிஞ்சிக்குப்பம் அருகில் வந்துகொண்டிருந்தபோது அப்ரோஸ் தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்து பேருந்தின் பின்புற படியில் இறங்குவதற்காக நின்று கொண்டிருந்தார்.
அப்போது அப்ரோஸ் திடீரென நிலை தடுமாறி பேருந்தின் படிக்கட்டிலிருந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அப்ரோஸ் பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே பேருந்து டிரைவர் மனோகரன் தலைமறைவாகிவிட்டார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மேல்பட்டி காவல்துறையினர் தலைமறைவாக உள்ள மனோகரனை வலைவீசி தேடி வருகின்றனர்.