கார் மரத்தின் மீது மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள மேடவாக்கம் பகுதியில் சாப்ட்வேர் இன்ஜினியரான செந்தில் நாதன் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு இந்துமதி என்ற மனைவி உள்ளார். இவர் சென்னை மாவட்டத்தில் உள்ள சேப்பாக்கம் பகுதியில் வேளாண்மை அலுவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு முகிலன் என்ற மகன் உள்ளார். இவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறும் உறவினர் வீட்டு திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் செல்ல முடிவெடுத்தனர். இந்நிலையில் செந்தில்நாதன், இந்துமதி, முகிலன் மற்றும் கொளத்தூர் லட்சுமி நகரில் வசித்து வரும் செந்தில் நாதனின் அண்ணனான குருநாதன் ஆகியோர் ஒரு காரில் கள்ளக்குறிச்சிக்கு சென்று திருமண விழாவில் கலந்து கொண்டனர்.
இதனை அடுத்து மீண்டும் இவர்கள் காரில் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, திண்டிவனம்-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற இவர்களது கார் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற மரத்தின் மீது பயங்கரமாக மோதி விட்டது. இந்த விபத்தில் காரில் பயணித்த 4 பேரும் பரிதாபமாக இறந்து விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஒலக்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.