கார் அரசு பஸ் மீது மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வேங்கிக்கால் பகுதியை சார்ந்தவர் ஸ்ரீபால். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி பத்மபிரியா. இவர்களுக்கு மிருதுளா, ஆரியா என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். சென்னையிலுள்ள மாதவரத்தில் பத்மபிரியாவின் தந்தையான சதீஷ்குமார் லாரி வைத்து தொழில் நடத்தி வந்தார். இவருடைய மனைவி சாந்தி.
இந்நிலையில் ஸ்ரீபால், பத்மபிரியா, சதீஷ்குமார், சாந்தி, மிருதுளா, ஆரியா ஆகியோர் சென்னையிலிருந்து தனது சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு வந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த அரசு பஸ் மீது மோதியுள்ளது. இதில் கார் முற்றிலுமாக நொறுங்கி எதிரே வந்த அரசு பஸ் பக்கத்தில் இருந்த பள்ளத்தில் விழுந்துள்ளது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஸ்ரீபால், பத்மபிரியா, சதீஷ்குமார், சாந்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இதில் படுகாயமடைந்த மிருதுளா, ஆரியாவை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.