கூலித்தொழிலாளி லாரி மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கெரகோடஅள்ளி பகுதியில் குமரேசன் என்பவர் வசித்து வந்தார். இவர் கூலித் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் குமரேசன் கடந்த 21-ம் தேதி அன்று இரவில் தனது மோட்டார் சைக்கிளில் காரிமங்கலம் பகுதியிலிருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
கெரகோடஅள்ளி பகுதியில் உள்ள பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது குமரேசன் மோட்டார் சைக்கிளுடன் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து எதிர்பாராதவிதமாக அவரது மோட்டார் சைக்கிளின் பின் வந்த லாரி குமரேசன் மீது ஏறியது. அதில் உடல் நசுங்கிய நிலையில் ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இச்சம்பவம் குறித்து காரிமங்கலம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.