மத்திய படை காவல்துறை துணை ஆய்வாளர் மற்றும் அவரது மனைவி இருவரும் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குன்னூர் நடுத்தெருவில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு கற்பகம் என்ற மனைவி இருந்துள்ளார். ராஜேந்திரன் மத்திய படை காவல்துறை துணை ஆய்வாளராக சத்தீஸ்கர் மாநிலத்தில் பணியாற்றி வந்துள்ளார். இதையடுத்து அவர் விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் ராஜேந்திரனும் அவரது மனைவி கற்பகமும் சொந்தக்காரரின் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்வதற்காக ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அப்போது செல்லும் வழியில் எதிர்பாராதவிதமாக கார் ஒன்று அவர்கள் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிள் தீ பற்றி எரிய ஆரம்பித்தது. மேலும் இந்த விபத்தில் கணவன் மனைவி இருவருக்கும் மோசமான காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர்கள் இருவரையும் அங்கிருந்தவர்கள் சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சென்று கொண்டிருந்த வழியிலேயே இருவரும் பரிதாபமாக இறந்துவிட்டனர். இச்சம்பவம் குறித்து கிருஷ்ணன் கோவில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவத்திற்கு காரணமான டிரைவர் காளிமுத்து என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.