பெரம்பலூர் அருகே கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் பகுதியில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனம் என்ற மனைவியும், 2 மகள்களும், சக்திவேல் என்ற மகனும் உள்ளனர். பாண்டியனின் மூத்த மகள் பரமேஸ்வரிக்கு அரியலூரை சேர்ந்த செந்தில் என்பவருடன் திருமணமாகி தமிழ்நிலவன், செந்நிலா என 2 குழந்தைகள் உள்ளனர். பாண்டியனின் இரண்டாவது மகள் பச்சையம்மாளுக்கு கொளப்பாடி பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்பவருடன் திருமணமாகி நந்திதா என்ற மகள் உள்ளார்.
இந்நிலையில் பச்சையம்மாள் இரண்டாவதாக கர்ப்பமாகியுள்ளார். கர்ப்பிணி பெண்ணான பச்சையம்மாளை பார்ப்பதற்காக அவருடைய தாய் தனம், அக்கா பரமேஸ்வரி, தம்பி சக்திவேல் மற்றும் அக்காவின் பிள்ளைகள் ஆகிய 5 பேரும் கொளப்பாடி பகுதிக்கு மொபட்டில் சென்றுள்ளனர். அங்கு பச்சையம்மாளை பார்த்துவிட்டு வேப்பூருக்கு வீடு திரும்பியுள்ளனர். அப்போது பச்சையம்மாளின் குழந்தை நந்திதாவை உடன் அழைத்துக்கொண்டு 6 பேரும் மொபட்டில் புறப்பட்டனர்.
கல்லங்காடு பகுதி அருகே சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த கார் ஒன்று எதிர்பாராமல் கட்டுப்பாட்டை இழந்து மொபட் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நந்திதா, பரமேஸ்வரி, செந்திலா ஆகியோர் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டனர். மேலும் பரமேஸ்வரியின் தாய், மகன், தம்பி ஆகியோர் பலத்த காயங்களுடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே தனம் இறந்துவிட்டார்.
இதையடுத்து பரமேஸ்வரியின் தம்பி சக்திவேலையும், மகன் தமிழ்நிலவனையும் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் தீவிர சிகிச்சைக்கு பலனின்றி சக்திவேல் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தமிழ்நிலவன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த குன்னம் காவல்துறையினர் விபத்திற்கு காரணமான கார் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.