இருசக்கர வாகனமும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சுண்டக்காம்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் கதிரேசன். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு அதன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதே பகுதியில் வசித்து வரும் சக்திவேல் என்பவரும் கதிரேசனும் பட்டம்பாளையம் கிராமத்தில் இருக்கும் பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் இரவு பணியை முடித்துவிட்டு அதிகாலை இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அந்த சமயத்தில் சாணார்பாளையம் அருகில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் கதிரேசன் வந்த இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர். இதில் கதிரேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் சக்திவேலுவை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கடத்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கதிரேசனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.