காஞ்சிபுரத்தில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் காவலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு காவல் பணியில் சேர்ந்துள்ளார். இதையடுத்து சிவகாஞ்சி காவல் நிலையத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தேர்தல் நெருங்கி கொண்டிருப்பதால் இவர் தேர்தல் பறக்கும் படையினருடன் சேர்ந்து வாகன சோதனை கண்காணிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார்.
சம்பவத்தன்று வெங்கடேசன் மோட்டார் சைக்கிளில் காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை நோக்கி பணி காரணமாக சென்றுள்ளார். தென்னேரி கூட்ரோடு பகுதி அருகே சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்பாராதவிதமாக போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிளின் மீது நேருக்கு நேர் வேகமாக மோதியது. இதில் போலீஸ்காரர் வெங்கடேசனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் துடித்துக் கொண்டிருந்தார்.
அங்கிருந்த சிலர் அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிர்ழந்தார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் எதிரே வந்த சந்தோஷ்குமார் என்பவருக்கு வாலாஜாபாத் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வாலாஜாபாத் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.