நாகப்பட்டினம் வேளாங்கண்ணி அருகே ஆறாம் வகுப்பு மாணவன் சரக்கு ஆட்டோ மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பிரதாபராமபுரம் அருகே முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோகிலா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு சிவசந்தோஷ் என்ற மகன் இருந்தார். சிவசந்தோஷ் ஆறாம் வகுப்பை வேளாங்கண்ணி பள்ளி ஒன்றில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சிவசந்தோஷும், கோகிலாவும் பிரதாபராமபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலை ஓரத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சரக்கு ஆட்டோ ஒன்று வேளாங்கண்ணி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த சரக்கு ஆட்டோ சாலையோரம் சென்று கொண்டிருந்த தாய் மகன் இருவர் மீதும் எதிர்பாராதவிதமாக வேகமாக மோதியது.
இதில் சிவசந்தோஷ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார். கோகிலாவுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த கீழையூர் காவல்துறையினர் சிவசந்தோஷின் உடலை கைப்பற்றி நாகை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பலத்த காயமடைந்த கோகிலா அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து கீழையூர் காவல்துறையினர் சரக்கு ஆட்டோ டிரைவர் ஸ்ரீவத்சன் என்பவர் மீது வழக்குப்பதிந்து பின் கைது செய்து சிறையில் அடைத்தனர்.