நாகை அருகே மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள கொல்லன் திடல் பகுதியில் காசிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுசீந்திரன் என்ற மகன் இருந்தார். சுசீந்திரன் தனியார் விடுதி ஒன்றில் வேளாங்கண்ணியில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சுசீந்திரன் வேலையை முடித்து விட்டு இரவில் மோட்டார் சைக்கிளில் ரயில் நிலையம் அருகே வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியதில் கறிக்கடை முச்சந்தியில் சுசீந்திரன் கீழே விழுந்தார்.
அதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கிருந்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி
மருத்துவமனைக்கு அவர் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சுசீந்திரன் பரிதாபமாக இறந்து விட்டார். இந்த விபத்து குறித்து வேளாங்கண்ணி காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.