சிவகங்கை அருகே எலக்ட்ரீசியன் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே பரமக்குடியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிஷேக் என்ற மகன் இருந்தார். அபிஷேக் எலெக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் சாலை விபத்து ஒன்றில் உயிருக்கு போராடிய நிலையில் கச்சாத்தநல்லூர் கிராமம் அருகே சாலையோரத்தில் கிடந்துள்ளார். அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் அபிஷேக்கின் உடலை மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அதன்பின் மதுரை அரசு மருத்துவமனைக்கு அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அவரது தந்தை செந்தில்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.