கொடைக்கானல் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் மலைப்பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கும்பூர் மலைக்கிராமத்தில் தங்கப்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த நாதன், அவருடைய மனைவி பாப்பா, செல்லப்பாண்டி, மோகன்ராஜ் ஆகியோரை அழைத்துக் கொண்டு ஜீப்பில் சென்றுள்ளார். ஜீப் மோகனூர் அருகே சென்று கொண்டிருந்தபோது வண்ணாச்சி வளைவு என்ற பகுதியில் எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி சாலையில் தாறுமாறாக ஓடி மலைப்பகுதியில் கவிழ்ந்தது. இதில் ஜீப்பை ஓட்டி வந்த டிரைவர் தங்கபாண்டியும், அவருடன் வந்த 7 பேரும் பலத்த காயம் அடைந்தனர். மேலும் ஜீப் மோசமாக சேதம் அடைந்தது.
இதனையடுத்து இந்த கோர விபத்தில் படுகாயமடைந்த 8 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கொடைக்கானல் அரசு மருத்துவமனையிலிருந்து செல்லபாண்டி, பாப்பா, தங்கபாண்டி, நாதன் ஆகிய 4 பேரும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மோகன்ராஜூம், மற்ற 4 பேரும் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கொடைக்கானல் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.