சாலையில் ஓரமாக நின்று கொண்டிருந்த லாரியின் மீது ஸ்கூட்டி மோதியதில் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கோட்டப்பட்டி கிராமத்தில் வசித்து வந்தவர் கலியராஜ். இவரது வீட்டிற்கு அருகில் ஜெயந்தி என்பவர் வசித்து வந்தார். கலியராஜும் ஜெயந்தியும் ஒரு ஸ்கூட்டியில் பூதலூர் நோக்கி வந்து கொண்டிருக்கும் போது அய்யனார்புரம் சாலையில் நின்று கொண்டிருந்த டாரஸ் லாரியின் பின் பக்கம் மோதியுள்ளது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த சம்பவம் நடந்த போது டாரஸ் லாரி ஓட்டுநர் அருகிலிருந்த கூட்டு குடிநீர் திட்ட குழாயில் வெளியேறும் தண்ணீரில் குளித்துக் கொண்டிருந்தார்.
அவர் குளிப்பதற்காக லாரியை சாலையின் ஓரமாக நிறுத்தியுள்ளார். மேலும் லாரியின் பின்பக்கத்தில் விளக்குகள் எதுவும் எரியவிடவில்லை என அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் இந்த விபத்து நடந்தவுடன் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடியதால் அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.