அரியலூர் மாவட்டத்தில் உள்ள கள்ளங்குறிச்சி சாலையில் அரசாங்கத்திற்கு சொந்தமான அரசு சிமெண்ட் ஆலை உள்ளது. இந்த சிமெண்ட் ஆலை சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேல் இயங்கி வருகிறது. இந்நிலையில் சுமார் ரூ.200 கோடி மதிப்பில் சிமெண்ட் ஆலை விரிவாக்க வேலைகள் நடைபெற்று வருகிறது. மேலும் வேலைகள் நிறைவடைந்த நிலையில் ஏப்ரல் மாதம் உற்பத்தியை தொடங்க நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலையில் உற்பத்தி சோதனை ஓட்டம் நடைபெற்றது. அப்போது திடீரென சுண்ணாம்பு கற்களை கொண்டு செல்லும் கன்வேயர் பெல்டில் தீ பிடித்து எரிந்தது.
உடனே அங்கிருந்து ஊழியர்கள் தீயை அணைத்தனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். காற்றின் வேகத்தின் அதிகரிப்பால் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் திணறினர். இதில் கன்வேயர் பெல்ட் எரிந்து நாசம் ஆனது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.தீ விபத்து குறித்து ஆலை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.