சாலையில் பதிக்கப்பட்ட இன்டர்லாக் கற்களால் சரக்கு வேன், சரக்கு லாரி போன்ற வாகனங்கள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூரில் இருந்து கோழிக்கோடு செல்லும் சாலையில் பலத்த மழை காரணமாக சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த விரிசல் ஏற்பட்ட பகுதியில் நெடுஞ்சாலைத்துறையினர் சுமார் 75 மீட்டர் தூரத்திற்கு இன்டர்லாக் கற்களை பதித்துள்ளனர். இவ்வாறு பதிக்கப்படும் இன்டர்லாக் கற்களால் வாகன விபத்துகள் அதிகரிக்கும் என்று ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அதிகாரிகள் அந்த கற்களை அகற்றவில்லை. இந்நிலையில் கூடலூர் பகுதியில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது.
இதனை அடுத்து அந்த சாலையில் சென்ற சரக்கு வேன் நடுரோட்டில் கவிழ்ந்து விட்டது. அதன் பின் அடுத்த 30 நிமிடங்களில் கேரளாவிலிருந்து அவ்வழியாக கர்நாடகா நோக்கி சென்ற சரக்கு லாரி ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விட்டது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, இனிமேலும் இந்த இடத்தில் இந்த விபத்துகள் நடைபெறாமல் இருக்க வேண்டுமென்றால் இன்டர்லாக் கற்களை அகற்றி தார் சாலைகள் போட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.