டிப்பர் லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் டிரைவர் உட்பட 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாப்பாரப்பட்டியில் இருந்து எம்.சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு பிக்கிலி மலைப்பாதை வழியாக டிப்பர் லாரி சென்றுள்ளது. இந்நிலையில் இந்த டிப்பர் லாரி கரிப்பள்ளம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது பாப்பாரப்பட்டி நோக்கி சென்ற அரசு பேருந்து டிப்பர் லாரி மீது எதிர்பாராத விதமாக மோதி விட்டது. இதனால் டிப்பர் லாரி அங்குள்ள 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. மேலும் மலைப்பாதையில் இருக்கும் பக்கவாட்டு சுவற்றின் மீது மோதி பேருந்து நின்று விட்டது.
இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர், லாரி ஓட்டுனர் மற்றும் 10-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொக்லைன் எந்திரம் மூலம் கவிழ்ந்து கிடந்த டிப்பர் லாரியை மீட்டனர். இதனையடுத்து காயமடைந்தவர்களை மீட்ட காவல்துறையினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.