பாகிஸ்தானில் பயங்கர வேகத்தில் சென்ற ஒரு குப்பை லாரி, இரண்டு வேன்கள் மீது மோதியதில் 12 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் பஞ்சாப் மாகாணத்தின் குஜ்ரன்வாலா என்னும் நகரத்தில் இருக்கும் சாலையில் ஒரு குப்பை லாரி பயங்கர வேகத்தில் சென்றிருக்கிறது. அப்போது திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, எதிரில் வந்து கொண்டிருந்த இரண்டு வேன்கள் மீது தொடர்ந்து மோதியது.
இந்த பயங்கர விபத்தில் அந்த வேன்களிலிருந்த சிறுமி உட்பட 12 நபர்கள் பரிதாபமாக பலியாகினர். மேலும் 10-க்கும் அதிகமானோருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதால் காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடிக்கொண்டிருக்கிறார்கள்.