இருசக்கர வாகனம் மரத்தில் மோதி ராமநாதபுர வாலிபர்கள் இருவர் பலியானார்கள்.
ராமநாதபுரம் மாவட்டம் தாயுமானசுவாமி கோவில் தெருவில் வசிப்பவர் பால்பாண்டி. ராமநாதபுரம் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் மோகன். இவர்கள் இருவரும் பெயின்டர்களாக பணிபுரிகின்றனர். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் தங்கள் இருசக்கர வாகனத்தில் ராமநாதபுரத்திலிருந்து லட்சுமிபுரம் ஊருணி வழியாக சென்றுகொண்டிருந்தனர். இருசக்கர வாகனத்தை பால்பாண்டி ஓட்டிச் சென்றுள்ளார்.
இவர்கள் லட்சுமிபுரம் கரையை ஒட்டிய தேவிபட்டினம் சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென நிலை தடுமாறி சாலையின் ஓரத்தில் இருந்த புளியமரத்தில் மோதி மோட்டார் சைக்கிளுடன் விழுந்தனர். இந்த விபத்தில் இருவருக்கும் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதுபற்றி தகவல் அறிந்த ராமநாதபுரம் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று இருவரின் உடலையும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.