சங்கரன் கோவிலுக்கு அருகில் மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி விபத்து ஏற்பட்டதில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சங்கரன் கோவிலுக்கு அருகில் இருக்கும் பெருங்கோட்டூர் கிராமத்தில் வசிக்கும் தி.மு.க பிரமுகர் காளைப்பாண்டியன், அந்த ஊரில் இரண்டு முறை பஞ்சாயத்து தலைவராக இருந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று அவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது எதிரில் வந்த வாகனம் மோதியதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
வாகனத்தை ஓட்டி வந்தவர், கட்டநார்பட்டியில் வசிக்கும் இன்பராஜ் என்பவரின் மகன் எமிலின் ஜெபஸ்டின் என்று தெரியவந்திருக்கிறது. இது பற்றி தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று காளைப்பாண்டியனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி இருக்கிறார்கள்.
இதனைத்தொடர்ந்து காளைப்பாண்டியனின் உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்து அவர் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி சாலை மறியலில் ஈடுபட்டார்கள். காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். தற்போது விபத்து குறித்த விசாரணை நடக்கிறது.