Categories
உலக செய்திகள்

“சிறுமிகளின் சுற்றுலா கனவு!”.. பெற்றோரின் வாகனத்தை ஓட்டி சென்றதால் நேர்ந்த விபரீதம்..!!

அமெரிக்காவில் சுற்றுலா செல்ல நினைத்த, இரண்டு சிறுமிகள் பெற்றோருக்கு தெரியாமல் காரை எடுத்து சென்ற போது விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவில் உள்ள உட்டா என்ற பகுதியில் வசிக்கும் 9 வயதுடைய சிறுமி, தன் 4 வயது  தங்கையுடன், கலிபோர்னியாவின் கோடைகால சாகசத்திற்கு செல்ல விரும்பியுள்ளார். எனவே தன் பெற்றோர் தூங்கும் சமயம் பார்த்து, அதிகாலை 3 மணியளவில் காரின் சாவியை எடுத்துக்கொண்டு, அச்சிறுமி ஓட்டுநர் இருக்கையிலும், அவரின் அருகில் சகோதரியும் அமர்ந்து காரில் புறப்பட்டுள்ளனர்.

ஆச்சரியப்படும் வகையில் மேற்கு ஜோர்டான் பகுதியிலிருந்து, 201 அதிவேக நெடுஞ்சாலையை கடந்து, மேற்கு பள்ளத்தாக்கு வரை 10 மைல் தொலைவு சிறுமியே ஓட்டிவந்துவிட்டார். ஆனால் கடைசியாக ட்ரக்கின் மீது மோதி விட்டார். இதுதொடர்பில் காவல்துறையினர் கடந்த 3ஆம் தேதியன்று ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தனர்.

அதில் சாலையில் விபத்து ஏற்பட்டதாக தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு சென்றோம். அங்கு ஒரு வாகனம் பெரிய ட்ரெக்கின் மீது மோதியதில் முன்புற பகுதி மொத்தமாக சேதமடைந்திருந்தது. அப்போது ஓட்டுநர் இருக்கையை பார்த்த நாங்கள் அதிர்ந்துவிட்டோம்.

வாகனத்தில் சிறுமிகள் இருந்தனர். ஆனால் அவர்கள் விபத்து நிகழ்வதற்கு முன்பாக 10 மைல் தொலைவு வாகனத்தை ஓட்டி வந்துள்ளனர். மேலும் இரு சிறுமிகளும் சீட்பெல்ட் அணிந்திருந்தனர். எனவே, நல்லவேளையாக காயங்களின்றி தப்பிவிட்டனர். ஆனால் வாகனம் முழுவதுமாக சேதமடைந்துவிட்டது.

இச்சம்பவம் பற்றி எதுவுமே அறியாத சிறுமிகளின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டவுடன் பெற்றோர் இருவரும் அதிர்ந்து போனார்கள். தங்கள் பிள்ளைகளுக்கு என்ன ஆனதோ? என்று பதற்றமடைந்தனர். அதன்பின்பு அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கலிபோர்னியா பயணம் குறித்து பிள்ளைகள் இருக்கும்போது பேசினோம் என்று கூறியுள்ளனர். எனவேதான் சிறுமிகளுக்கு இந்த பயண எண்ணம் தோன்றியதாகக் அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.

Categories

Tech |